காதலர் தினம்
காதலர்தினமாம்! காதலர் தினமாம்!
கலவரங்கள் பலவும் நிகழ்ந்திடும் தினமாம்!
காதல் செய்வீர் என்றனன் பாரதி! -அதில்
களிப்புற்று இருந்தனன் பார்த்தனின் சாரதி!
வேலை இல்லா வெட்டிப்பயல்கள் - இங்கு
வேலி போடுவது வெட்கக் கேடு!
சேலை துரத்தும் சிறுமதி கொண்டோர்
சேனை அல்ல செம்மறி கூட்டம் !
பேதை பெண்டிர் பின்முடி பிடித்த
பேடி பயல்கள் பேரவ மானம்!
கோதைகள் குடித்தால் குடிகெடும் என்பது
கோட்டான் ஓதும் சாத்தான் வேதம்!
பண்பாடு பேசி பாதகம் செய்வோர்
பகல்வேடம் பூண்ட பாவிகள் ஆவார்!
உன்பாடு பார்த்து உன்வழி சென்றால்
பெண்பாடு பேணல் பெண்மை அறியும்!
காதலும் வீரமும் நம்மிரு கண்கள்
கண்களை பறிப்பது கடவுளின் செயலோ?
தீது அது செய்வோர் தெரிந்தே செய்தால்
தெய்வங்கள் எங்கும் மன்னிப்ப துண்டோ?
விடுதலை விளைந்த வீரத்திருநாட்டில் -இந்த
வேடர்கள் பிறந்து வளர்ந்தது பாவம்!
சடுதியில் நடந்த விடுதி கொடுமைகள்
சாக்கடை பன்றியின் சாதனை தோற்றம்!
சேவை செய்திட சிலிர்த்தெழும் கூட்டம்
சேரியில் செய்தால் செம்மை உண்டாகும்!
பாவையர் உரிமை பறித்திடும் கூட்டம்
பாதாள சாக்கடை தூர்வார வருமோ?
காதல் என்பது கடவுளின் வடிவம்!
காமமும் கூட அதிலோர் அங்கம்!
ஆதலினாலே காதல் செய்வீர்! - அதன்
ஆற்றலை நீங்களும் உணர்ந்த்திடு வீரே!
ஆர்பறிப் பில்லா அமைதிக் காதல்!
ஆத்மாக்கள் இணையும் அற்புதக் காதல்!
பார்ப்புகழ் நல்ல பண்புள்ள காதல்!
பாமரர் வளர்க்கும் பாசக் காதல்!
வரைமுறை கொண்ட வசந்தக் காதல்!
வாலிபம் சேர்க்கும் வளமைக் காதல்!
நரைமுடி வரினும் நட்புக் காதல்!
நங்கையர் வளர்க்கும் நாணக் காதல்!
நானிலம் போற்றும் நளினக் காதல்!
நன்மை வளர்க்கும் நல்லோர் காதல்!
மாநிலம் போற்றும் மாசற்ற காதல்!
மாண்பை வளர்க்கும் மனிதக் காதல்!
வனப்புக் குறையா வாலிபக் காதல்!
வாசம் கூட்டும் நேசக் காதல்!
மனதை திருடும் மானசீகக் காதல்! -திரு
மணத்தில் முடியும் தெய்வீகக் காதல்!
உறவை வளர்க்கும் உன்னதக் காதல்!
உணர்வை வளர்க்கும் ஊமைக் காதல்!
வரவை சொல்லும் காதலர் தினமே! -நீ
வாழிய! வாழிய! வாழிய! வாழியவே!
மணிவேல்
சில எழுத்து பிழைகள் இருக்கிறது. இதில் திருத்துவது சிரமமாக இருக்கிறது. முயற்சி செய்கிறேன். அதுவரை பொறுத்தருள்க. நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக