சனி, 7 பிப்ரவரி, 2009

ஈழத்துயரம்

இராவணன் பூமியிலே இராணுவத்தின் சத்தம்
இனமான என்மக்கள் சிந்துகிறார் இரத்தம்
இராட்சத பக்சேவின் இரத்த வெறியாட்டம்
இரணவலியில் துடிக்கிறது என்தமிழர் கூட்டம்

மரணத்தின் பிடியினிலே மாண்புதமிழ் மக்கள்
மனிதத்தன்மை சிறிதுமில்லை சிங்களத்து புட்கள்
காரணத்தை சொல்வதுயார்? கடவுளவன் உண்டா?
கண்மூடி வாய்பொத்தி இருப்பதேனோ பித்தா?

ஊருக்கு உபதேசம் உள்ளுக்குள் பகல்வேடம்
உதவிசெய்ய மனமுமில்லை உறுதிமொழி எதுவுமில்லை
பேருக்கு ஓர்அறிக்கை பெரியண்ணன் நாட்டாமை
பெற்றபலன் ஒன்றுமில்லை பொறுப்பதனால் நன்மைஇல்லை

கேட்பதற்கு நாதியில்லை கேட்போரும் யாருமில்லை
கெட்டதெங்கள் இனமல்லவா? கேட்பதற்கே இரணமல்லவா?
மீட்பதற்கு யாருமில்லை மீளாத்துயரினிலே மீன்படகு
மேலேறி மெல்லகரைசேரும் மீன்கண்கள் குளமல்லவா?

இராமனவன் பாலமென்று குரலெழுப்பும் பலபேர்
இரத்த ஓலத்தை இரசித்திருப்ப தேனோ?
பாமரர் வாழுகின்ற பாரதத்திருனாடே? உந்தன்
பந்தங்கள் படும்பாட்டை பார்த்திருப்ப தேனோ?

வெம்பித் தவிக்கின்றார் எங்களின மக்கள்
வேதனையில் துடிக்கின்றார் வெறிச்சோடிய தெருவில்
"தும்பியல்" சம்பவத்தை துடைக்கத்தான் வேண்டும்
துயர்துடைக்க நம்கரங்கள் நீளத்தான் வேண்டும்

கன்னிப் பருவத்தில் கற்பிழந்த பெண்டிர்
கல்விச் சாலையிலே உயிரிழந்த சிறுவர்
கண்டதுண்டோ? கேட்டதுண்டோ? கண்கலங்கும் கொடுமை
கல்மனமும் கரையாதோ? கருணையிலேன் வறுமை?

தினந்தோறும் சண்டை தெருவெல்லாம் குருதி
தினவெடுத்த தோள்களிலே குறையவில்லை உறுதி
பிணந்தின்னி கழுகுகளை அழித்திடனும் சாமி
பிறந்திடுமே ஓர்நாளில் தனித்தமிழர் பூமி!


மணிவேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக