சனி, 14 பிப்ரவரி, 2009

அக்னி சிறகொன்று கண்டேன்!

 • அக்னி சிறகொன்று கண்டேன்!- அது
 • அரியணை ஏறிய அதிசயம் கண்டேன்!
 • செக்கினை சிதம்பரத்தில் கண்டேன்!- இவன்
 • சிந்தையில் நானந்த சிவனையே கண்டேன்!
 • கொக்கினை குளக்கரையில் கண்டேன்!- அதன்
 • கூர்நாசி கூர்மையைஇவன் பார்வையில் கண்டேன்!
 • எக்கினை இரும்பினுள் கண்டேன்! -இவன்
 • எண்ண வலிமையை அதனுடன் வைத்தேன்!
 • மொக்கது மலராகக் கண்டேன்!- இவன்
 • முயற்சியும் திருவினை யாகவே கண்டேன்!
 • பொக்ரானில் பாதாளம் கண்டேன்!-இவன்
 • பொலிவுடன் நின்றிருந்த காட்சியும் கண்டேன்!
 • சிக்கனத்தை சிறுவயது முதலே - இவன்
 • செலவழித்த செய்திகளை செவிவழியே கேட்டேன்!
 • இக்கணமும் கடைபிடிக்க கண்டேன்! - இந்த
 • இறையன்பன் இயற்பண்பை இமயத்துடன் வைத்தேன்!
 • சக்தியுள் சிவனைநான் கண்டேன் !-இந்த
 • சந்நியாசி உள்ளத்தில் சமத்துவத்தை கண்டேன்!
 • சுக்கினுள் மருந்துண்டு கண்டேன்! -இந்த
 • சுல்தானின் உள்ளத்தில் விருந்தோம்பல் கண்டேன்!
 • சுக்கிரனை சோதிடத்தில் கண்டேன்!-இந்த
 • சுந்தரனின் சாதகத்தை அவன்கணிக்க கண்டேன்!
 • வக்கிரங்கள் வளர்ந்துவர கண்டேன்! - இந்த
 • வாத்தியாரின் வழிகாட்டல் வேண்டுமெனக் கண்டேன்!
 • வாக்களிக்க கேட்டிருக்க கண்டேன்! - இவன்
 • வாக்கில் சுத்தமது வீற்றிருக்க கண்டேன்!
 • சொக்கனிடம் ராமன்வேண்ட கண்டேன்! - அந்த
 • சொந்தமண்ணில் இவன்வீட்டின் எளிமையையும் கண்டேன்!
 • கடைகோடி தமிழனிவன் கண்டேன்!-அன்று
 • குடியரசு தலைவரான காட்சியையும் கண்டேன்!
 • உடைமாறிப் போனதை கண்டேன்! - ஆனால்
 • உள்ளத்தில் மாற்றமில்லை உண்மையாய் கண்டேன்!
 • செய்தியாளர் சந்திப்பு கண்டேன்!- இவன்
 • சிறிதுநேரம் தரையமர்ந்து இளைப்பாறக் கண்டேன்!
 • பொய்யான மரபுடையக் கண்டேன்!- அவர்க்கு
 • பொறுப்புணர்வு வேண்டுமென இவன்வுரைகக் கண்டேன்!
 • கனவுகள் காணசொன்ன கவிஞன்! - இன்றும்
 • கல்விதனை போதிக்கும் கடமையுள்ள ஆசான்!
 • இனமான எங்கள் தமிழ்மகனை - இந்த
 • இந்தியத்தாய் சுவீகாரம் செய்துகொண்டு விட்டாள்
 • பிறைசூடன் குடிகொண்ட பூமி - அந்த
 • பிறைநிலவே இவன் இல்ல பிரியமான சாமி!
 • கறைபடியா கைகள்கொண்ட மனிதன் - நாம்
 • கவலை இன்றிவாழ்வதற்கு கனவுகாணும் புனிதன்!
 • இணையில்லா எங்கள் உள்ளக்கள்வன் - இவன்
 • இளைஞர்களின் உள்ளத்தில் எந்நாளும் முதல்வன்!
 • துணையில்லா தூயத்தமிழ் பிள்ளை - இவன்
 • துணிவான கனவிற்கு வானமே எல்லை!
 • பலகாலம் இவன்வாழ வேண்டும்! - இந்த
 • பாரதமே இவனாலே பயனடைய வேண்டும்!
 • உலகையே நாமால வேண்டும்! - இந்த
 • உத்தமனின் கனவெல்லாம் நனவாக வேண்டும்!
 • எமனோடு போராட வேண்டும்! - இவன்
 • இன்னுயிரை எடுப்பதற்கு தடைபோட வேண்டும்!
 • சமதர்மம் பேணுகின்ற பெருமான் - இவன்
 • சபைதனிலே நாயகனாய் மீண்டும் வரவேண்டும்!
 • கடல்சூழ்ந்த ராமேஸ்வரம் ஊராம்! - அப்துல்
 • கலாம் என்பதிவ னுடைய பேராம்!
 • மடலெழுத வார்த்தையில்லை பெண்ணே! - இந்த
 • மாமனிதன் பேர்சொன்னால் மதிப்புவரும் முன்னே!

எழுத்து பிழைகள் பொறுக்க.

மணிவேல்

வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

காதலர் தினம்

    காதலர் தினம் 

    
   காதலர்தினமாம்! காதலர் தினமாம்!
 • கலவரங்கள் பலவும் நிகழ்ந்திடும் தினமாம்!
 • காதல் செய்வீர் என்றனன் பாரதி! -அதில்
 • களிப்புற்று இருந்தனன் பார்த்தனின் சாரதி!
 • வேலை இல்லா வெட்டிப்பயல்கள் - இங்கு
 • வேலி போடுவது வெட்கக் கேடு!
 • சேலை துரத்தும் சிறுமதி கொண்டோர்
 • சேனை அல்ல செம்மறி கூட்டம் !
 • பேதை பெண்டிர் பின்முடி பிடித்த
 • பேடி பயல்கள் பேரவ மானம்!
 • கோதைகள் குடித்தால் குடிகெடும் என்பது
 • கோட்டான் ஓதும் சாத்தான் வேதம்!
 • பண்பாடு பேசி பாதகம் செய்வோர்
 • பகல்வேடம் பூண்ட பாவிகள் ஆவார்!
 • உன்பாடு பார்த்து உன்வழி சென்றால்
 • பெண்பாடு பேணல் பெண்மை அறியும்!
 • காதலும் வீரமும் நம்மிரு கண்கள்
 • கண்களை பறிப்பது கடவுளின் செயலோ?
 • தீது அது செய்வோர் தெரிந்தே செய்தால்
 • தெய்வங்கள் எங்கும் மன்னிப்ப துண்டோ?
 • விடுதலை விளைந்த வீரத்திருநாட்டில் -இந்த
 • வேடர்கள் பிறந்து வளர்ந்தது பாவம்!
 • சடுதியில் நடந்த விடுதி கொடுமைகள்
 • சாக்கடை பன்றியின் சாதனை தோற்றம்!
 • சேவை செய்திட சிலிர்த்தெழும் கூட்டம்
 • சேரியில் செய்தால் செம்மை உண்டாகும்!
 • பாவையர் உரிமை பறித்திடும் கூட்டம்
 • பாதாள சாக்கடை தூர்வார வருமோ?
 • காதல் என்பது கடவுளின் வடிவம்!
 • காமமும் கூட அதிலோர் அங்கம்!
 • ஆதலினாலே காதல் செய்வீர்! - அதன்
 • ஆற்றலை நீங்களும் உணர்ந்த்திடு வீரே!
 • ஆர்பறிப் பில்லா அமைதிக் காதல்!
 • ஆத்மாக்கள் இணையும் அற்புதக் காதல்!
 • பார்ப்புகழ் நல்ல பண்புள்ள காதல்!
 • பாமரர் வளர்க்கும் பாசக் காதல்!
 • வரைமுறை கொண்ட வசந்தக் காதல்!
 • வாலிபம் சேர்க்கும் வளமைக் காதல்!
 • நரைமுடி வரினும் நட்புக் காதல்!
 • நங்கையர் வளர்க்கும் நாணக் காதல்!
 • நானிலம் போற்றும் நளினக் காதல்!
 • நன்மை வளர்க்கும் நல்லோர் காதல்!
 • மாநிலம் போற்றும் மாசற்ற காதல்!
 • மாண்பை வளர்க்கும் மனிதக் காதல்!
 • வனப்புக் குறையா வாலிபக் காதல்!
 • வாசம் கூட்டும் நேசக் காதல்!
 • மனதை திருடும் மானசீகக் காதல்! -திரு
 • மணத்தில் முடியும் தெய்வீகக் காதல்!
 • உறவை வளர்க்கும் உன்னதக் காதல்!
 • உணர்வை வளர்க்கும் ஊமைக் காதல்!
 • வரவை சொல்லும் காதலர் தினமே! -நீ
 • வாழிய! வாழிய! வாழிய! வாழியவே!

 • மணிவேல்
  சில எழுத்து பிழைகள் இருக்கிறது. இதில் திருத்துவது சிரமமாக இருக்கிறது. முயற்சி செய்கிறேன். அதுவரை பொறுத்தருள்க. நன்றி.


  சனி, 7 பிப்ரவரி, 2009

  ஈழத்துயரம்

  இராவணன் பூமியிலே இராணுவத்தின் சத்தம்
  இனமான என்மக்கள் சிந்துகிறார் இரத்தம்
  இராட்சத பக்சேவின் இரத்த வெறியாட்டம்
  இரணவலியில் துடிக்கிறது என்தமிழர் கூட்டம்

  மரணத்தின் பிடியினிலே மாண்புதமிழ் மக்கள்
  மனிதத்தன்மை சிறிதுமில்லை சிங்களத்து புட்கள்
  காரணத்தை சொல்வதுயார்? கடவுளவன் உண்டா?
  கண்மூடி வாய்பொத்தி இருப்பதேனோ பித்தா?

  ஊருக்கு உபதேசம் உள்ளுக்குள் பகல்வேடம்
  உதவிசெய்ய மனமுமில்லை உறுதிமொழி எதுவுமில்லை
  பேருக்கு ஓர்அறிக்கை பெரியண்ணன் நாட்டாமை
  பெற்றபலன் ஒன்றுமில்லை பொறுப்பதனால் நன்மைஇல்லை

  கேட்பதற்கு நாதியில்லை கேட்போரும் யாருமில்லை
  கெட்டதெங்கள் இனமல்லவா? கேட்பதற்கே இரணமல்லவா?
  மீட்பதற்கு யாருமில்லை மீளாத்துயரினிலே மீன்படகு
  மேலேறி மெல்லகரைசேரும் மீன்கண்கள் குளமல்லவா?

  இராமனவன் பாலமென்று குரலெழுப்பும் பலபேர்
  இரத்த ஓலத்தை இரசித்திருப்ப தேனோ?
  பாமரர் வாழுகின்ற பாரதத்திருனாடே? உந்தன்
  பந்தங்கள் படும்பாட்டை பார்த்திருப்ப தேனோ?

  வெம்பித் தவிக்கின்றார் எங்களின மக்கள்
  வேதனையில் துடிக்கின்றார் வெறிச்சோடிய தெருவில்
  "தும்பியல்" சம்பவத்தை துடைக்கத்தான் வேண்டும்
  துயர்துடைக்க நம்கரங்கள் நீளத்தான் வேண்டும்

  கன்னிப் பருவத்தில் கற்பிழந்த பெண்டிர்
  கல்விச் சாலையிலே உயிரிழந்த சிறுவர்
  கண்டதுண்டோ? கேட்டதுண்டோ? கண்கலங்கும் கொடுமை
  கல்மனமும் கரையாதோ? கருணையிலேன் வறுமை?

  தினந்தோறும் சண்டை தெருவெல்லாம் குருதி
  தினவெடுத்த தோள்களிலே குறையவில்லை உறுதி
  பிணந்தின்னி கழுகுகளை அழித்திடனும் சாமி
  பிறந்திடுமே ஓர்நாளில் தனித்தமிழர் பூமி!


  மணிவேல்