ஞாயிறு, 26 ஜூலை, 2020

உலகமெல்லாம் வாழும் நாங்கள்
உடைந்து போனோம் நண்பா !
ஊண் உறக்கம் பகலிரவு
மறந்துபோனோம் நண்பா!
உனைநினைத்து கண்கலங்கி
உறைந்து போனோம் நண்பா!
பாட்டிசைக்கும் பைந்தமிழே!
பாசக்கார நண்பா !
பாசக்கயிற் தாங்கினையோ!
பதறுதடா நெஞ்சம் !

எங்கே சென்றாய்? - குறிஞ்சி
எங்கே சென்றாய்?
எங்களை ஏங்கவிட்டு எங்கே சென்றாய்?
குடும்பத்தைத் தவிக்கவிட்டு எங்கே சென்றாய்?

வேலூரில் பிறந்து நீயும் வளர்ந்தாயடா!
கருப்பூரில் கல்லூரி சேர்ந்தாயடா!
பொறியியலில் நீ பட்டம் பெற்றாயடா!
பொறுப்பான பதவிக்கும் வந்தாயடா!

மேலூரில் இடம் கேட்டுச் சென்றதுமேனோ?
மேதினியில் இடமில்லை என்றார் யாரோ?
உன்னூரில்  உனைக்காண மனம் ஏங்குதே!
மண்ணூரில் பார்க்கத்தான் வைத்தாயடா!

கல்லூரி நாட்களில் நாம் களித்தோமடா!
காலத்தை ஞாலத்தை மறந்தோமடா!
உள்ளூரில் ஊர்சுற்றித் திரிந்தோமடா!
உள்ளத்தில் பேரன்பை வளர்த்தோமடா!

கள்ளமும் கபடமும் உன்னில் இல்லை!- உன்
குறும்புக்கும் எந்நாளும் பஞ்சமுமில்லை!
தெள்ளமுதாய் திகட்டாத கானம் சொல்வாய்!
தெளியாத போதைக்கு வழியும் சொல்வாய்!

நட்புண்டு பகையில்லை உன்னில் என்றும்
நகைப்புக்கும் புகைப்புக்கும் குறைவுமில்லை!
எட்டாத இடம்நோக்கி சென்றாய் கண்ணா!
எதற்கென்று எனக்கின்று சொல்வாய் கண்ணா!

பாட்டொன்று நீ பாட கேட்டோமடா!
பழசெல்லாம் அசைபோட்டு பார்த்தோமடா!
பொட்டென்று நீ மறைய திகைத்தோமடா!
பொல்லாத விதியை நாம் சபித்தோமடா!

தமிழாசான் பெற்றெடுத்த தவத்தின் பிள்ளை!
தனியாக போகத்தான் துணித்ததுமேனோ?
அமிழ்தான உன்கவிதை அருந்தும் முன்னே!
அவசரமாய் சென்றாயே முறையா கண்ணா?

குறிஞ்சிக்கு இணையான மலருமுண்டோ?
கோமானே உனைப்போல எவருமுண்டோ?
நெரிஞ்சிக்கு முள்ளுண்டு அறிவோம்  கண்ணா!
நெஞ்சத்தை அதுதைக்கத் துடித்தோம் கண்ணா!

தொண்ணூற்று ஒன்றில் நாம் முடித்தோமடா!
தொடர்கதையாய் நட்பை நாமும் வளர்த்தோமடா!
கண்பட்டு போனதுவோ அதுவும் அறியோமடா!
கண்ணீரில் நனைகின்றோம் பதில் கூறடா!

டீக்கடையில் தாளாத சோகம் கண்ணா!
தேநீரும் வேம்பாக கசக்கின்றதே!
நாக்கடியில் தழுதழுக்க அழுதோம் கண்ணா!
நட்பிற்கு தாழுண்டோ சொல்வாய் கண்ணா!

நன்றான இல்வாழ்க்கை கொண்டாயடா!
நல்முத்தாய் பிள்ளை இரண்டை பெற்றாயடா!
கொண்டாடும் காலத்தில் பிரிந்தாயடா!-இந்தக்
கொடுமைக்கு எங்களிடம் பதில் ஏதடா?

துக்கத்தில் நாமிருந்தோம் துணையாகவே!
துன்பத்தில் தோள் கொடுப்போம் தூணாகவே!
ஏக்கத்தில் இருப்போர்க்கு ஆறுதல் சொல்வோம்!
எதிர்காலம் உண்டென்று வாழ்த்துச் சொல்வோம்!

நல்வாழ்த்துச் சொல்வோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக