வியாழன், 30 மார்ச், 2017

டெல்லி சென்று போராடும்
டெல்டா தமிழக விவசாயிகள்!
தள்ளி நின்று பார்த்திருக்கும்
தனிபெரும் தலைவர் மோடியன்றோ?
அள்ளி கொடுக்க மனமில்லை - பார்க்க
அனுமதி கூட கிடைக்கவில்லை!
எள்ளி  நகையாடும் நிலைமையிலே
எதற்காக இங்கே இறையாண்மை?
சுள்ளி பொறுக்கும்  எம்குலப்பெண்
சோற்றில் உப்பிட்டே ஊட்டுகிறாள்!
கல்லும் மண்ணும் கடுநெஞ்சும்
கரையும் தமிழன் குரல்கேட்டால்!
உன்மனம் கரைய மறுப்பதுமேன்?
உலகம் சுற்றும் வாலிபனே!
கார்பனும் வேண்டாம் களவும் வேண்டாம்
காவிரித் தாயை கொடுத்துவிடு!
கடலையும் மண்ணையும் கொடுத்துவிட்டால்
கார்ப்பரேட்டுகள் எம்மின் காலடியில்!
நெஞ்சம் விரிந்து பலனில்லை!
நெடுவாசல் திட்டம் மூடிவிடு!
உள்ளம் விரிந்து வரும்பொழுது
உளமார யாமும் வாழ்த்துவமே!
விற்போர் புரியும் எம்பெண்டிர்
வேல்போர் அதிலும் வல்லவர்காண்!
அறப்போர் புரியும் எம்மையுமே!
மறப்போர் புரிய தூண்டுவதேன்?
காட்டை வளைத்தீர் மடம்கண்டீர்!
கங்கையை புனிதநதி என்றீர்!
நாட்டை ஆள யாம்மென்றீர்!
நற்றமிழ் மக்களை வஞ்சித்தீர்!
கேட்டை விளைத்தீர் யமக்கிங்கே !
கெடுபலன் உமக்கும் விளையாதோ?
பட்டை நாமம் சாத்திவிட்டீர் !
பார்ப்போம் நிலைப்பது யாரென்றே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக